நமது சிங்கப்பூர் மரபுடைமைத் திட்டம் 2.0
வணக்கம்! நமது சிங்கப்பூர் மரபுடைமை திட்டம் 2.0 – சிங்கப்பூரின் மரபுடைமை மற்றும் அரும்பொருளகத் துறைக்கான அடுத்த அத்தியாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டம் 2023 முதல் 2027 வரையிலும் அதற்கு அப்பாலும் நமக்கு வழிகாட்டும். இப்புதிய திட்டம், முதலாவது மரபுடைமை பெருந்திட்டமான நமது சிங்கப்பூர் மரபுடைமை திட்டம் உருவாக்கித்தந்த வலுவான அடிப்படைகளை முன்னெடுத்துச் செல்லும். நமது மரபுடைமைத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் தொலைநோக்கையும் உத்திகளையும் புதிய திட்டம் உள்ளடக்குகிறது.
இத்திட்டத்தைத் தயாரிக்க, அரும்பொருளக வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூகக் குழுக்கள், இளையர்கள், பாரம்பரியக் கைவினைக் கலைஞர்கள் உட்பட, பல்வேறு பின்னணிகளையும் சேர்ந்த 650க்கும் மேற்பட்டோரை நாங்கள் கலந்தாலோசித்தோம். இணையம் வழியாகவும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட கூடங்கள் வாயிலாகவும் பொதுமக்களிடமிருந்து 72,000க்கும் மேற்பட்ட கருத்துகளும் எங்களுக்குக் கிடைத்தன. நமது மரபுடைமையில் நமக்குள்ள நாட்டத்தை இது சிறப்பாக உணர்த்துகிறது!
“HP2” என்றும் அறியப்படும் நமது சிங்கப்பூர் மரபுடைமை திட்டம் 2.0, அடையாளம், சமூகம், தொழில்துறை, புத்தாக்கம் என்ற நான்கு வளர்ச்சிப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் விறுவிறுப்பான புதிய முனைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்த இணையத்தளத்தை நாடுங்கள்! நமது சிங்கப்பூர் மரபுடைமை திட்டம் 2.0 குறித்த நிர்வாகச் சுருக்கத்தையும் முழு அறிக்கையையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால், go.gov.sg/hp2resources இணையத்தளத்தை நாடலாம்.